டெல்லி:

காராஷ்டிராவில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி நீடித்து வரும் நிலையில்,  தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்.  இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க தேசிவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இதில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்,  காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.

தேர்தலின்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தேர்தலை எதிர்கொண்ட நிலையில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளும் தங்களது பிடிவாதங்களை விட்டுக்கொடுக்க முன்வராத நிலையில், கூட்டணி முறிந்து, பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சிவசேனா  என்சிபி, காங்கிரஸ் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே சரத்பவாரை சந்தித்து பேசி, குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை ஆதரவு குறித்து எந்தவித அறிவிப்பும் தெரிவிக்க முன்வராத நிலையில், சிவசேனா ஆட்சி அமைப்பதிலும் இழுபறி நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தை மட்டுமே தொடர்ந்து வருகின்றன.

சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்தால், 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் 154 இடங்கள் இருக்கும், இது பெரும்பான்மையை விட ஒன்பது அதிகம்.

இந்த பரபரப்பான நிலையில்தான், சரத் பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திங்கள்கிழமை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்து திரும்பிய சரத்பவார், மகாராஷ்டிரா ஆட்சி அமைப்பது தொடர்பாக பேசவில்லை என்று அசால்டாக கூறிவிட்டு நடையை கட்டினார்.

”சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், அவர்கள்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், மக்கள் எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கி உள்ளார்கள். அதன்படி நாங்கள் செயல்படுவோம் என்று ஏற்கனவே சரத்பவார் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்ற மேலவையின் 250 வது அமர்வு விழாவில் பேசிய மோடி, கண்ணியமுடன் நடப்பவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) உறுப்பினர்கள் ஒருபோதும் சபையின் மத்திய பகுதிகளுக்குள்  நுழைவதில்லை, மற்றவர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மோடியை சரத் பவார் இன்று சந்தித்து பேசவுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பின்போது,  மகாராஷ்டிர அரசியல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க படும்  வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கக்கூடும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

பிரதமரை சந்திப்பது குறித்து, தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மாலிக்,  மகாராஷ்டிராவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை  விடுக்கவே சந்திக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

தற்போதைய நிலையில், பாஜக பா.ஜ 105 இடங்களை வைத்துள்ள நிலையில், என்சிபி கட்சி தங்களுடைய 54 உறுப்பினர்களின் ஆதரவை வழங்கினார், பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு  உள்ளது குறிப்பிடத்தக்கது.