மும்பை
மகாராஷ்டிர மாநில ஆளுநரை நாளை மாலை 3 மணிக்குத் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க உள்ளனர்.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் பதவி பங்கீடு சர்ச்சை காரணமாகக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
அதையடுத்து ஆளுநர் முதலில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். பாஜக ஒப்புதல் அளிக்காததால் சிவசேனா கட்சியையும் அதற்கடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் இக்கட்சிகள் கேட்ட கால அவகாசத்தை அளிக்க மறுத்து ஜனாதிபதி ஆட்சி அமைக்க பரிந்துரை செய்துள்ளார்.
ஜனாதிபதி ஆட்சி அமலாக்கத்தை விரும்பாத சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஒரு குறைந்த பட்ச பொதுத் திட்டத்தை அமைத்துள்ளது. அதையொட்டி நாளை மாலை மூன்று மணிக்கு இந்த மூன்று கட்சியினரும் ஒன்றாகச் சென்று மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.