மேட்டூர்:

மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால்,, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி வினாடிக்கு 14,784 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8.30 நிலவரப்படி 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 20,000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதோடு, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சில வருடங்களாக பருவமழை பொய்து போனது காரணமாகவும், கர்நாடகா சரியான முறையில் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்ட காரணத்தாலும், மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டாத நிலை இருந்து வந்தது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை ஓரளவு பெய்து வருவதாலும், கர்நாடக மற்றும் கேரளாவில் அதிக அளவில் மழை பொழிந்துள்ளதாலும் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. கர்நாடகாவிலும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும்  கிருஷ்ண சாகர், கபினி அணைகளும் நிரம்பி உள்ளது. இதனால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணை தற்போது 4வது முறையாக முழு கொள்ளவை எட்டி உள்ளது.

நடப்பாண்டில், ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதன்முறையாக பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

2வது முறையாக செப்டம்பர் 24ந்தேதி முழு கொள்ளவை எட்டியது.

தொடர்ந்து 3வது முறையாக, அக்டோபர் 23 ஆம் தேதி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.

அதன் பிறகு, மேட்டூர் அணையின் நீர் வாரத்தின் அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

தற்போது 4வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டி உள்ளது.

இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.