ஷாங்காய்: அதிவேகம் கொண்ட 5ம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பம் எனப்படும் 5ஜி வசதியை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், ஒரு நொடிக்கு 1 ஜிபி என்ற வகையில், 300 ஜிபி டேட்டாவைப் பெற முடியும். இந்தப் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, சீனாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளன.
சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய பெரிய தொலைதொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த சேவைக்கான குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக, இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் ரூ.1272 செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5ஜி சேவை வசதி, முதற்கட்டமாக சீனாவின் 50 நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு சீனா முழுவதும் விரிவாக்கம் செய்வதோடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் கொண்டுசெல்ல சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிவேக சேவையைப் பெறுவதற்கு, அந்நாட்டில் ஏற்கனவே 1 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததாய் தகவல்கள் வரும் அதேவேளையில், ஹூவேய் மற்றும் ஸியோமி போன்ற பெரிய நிறுவனங்கள், 5ஜி வசதிகொண்ட மொபைல் போன்களை ஏற்கனவே தயாரிக்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.