நவம்பர் 1ந்தேதியான இன்று சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகஅரசு இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ந்தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்துள்ள நிலையில், சேலம் தினம் 1866ம் ஆண்டு முதலே கொண்டாடப்பட்டு வருகிறது.
1866 ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. நாளை ( 1.11.2019 ) சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு 154 ஆண்டுகள் ஆகிறது . அதை ஒட்டி சேலம்_தினம் கடைபிடிக்கபடுகிறது .
சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் பின் மைசூர் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. போரில் தோற்ற திப்புசுல்தானிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சேலம் மாவட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அதன் பின்னரான சேலத்தின் வளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ..
இன்றளவும் ஆங்கிலேயர்களின் பெயரிலேயே உள்ள சேலம் பகுதிகளின் வரலாறு இதோ…
➨ 1853 முதல் 1862 வரை சேலம் கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என பெயரிடப் பட்டது.
➨ 1870 முதல் 1881 வரை கலெக்டராக இருந்த C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என பெயரிடப் பட்டது.
➨ சேலத்தின் மொத்த வியாபார பகுதி இட நெருக்கடியான இடத்தில் செயல் பட்டு வந்தது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அதற்க்கு அவர் பெயரே லீ பஜார் என சூட்டப்பட்டது.
➨ 1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டது.
➨ காய்கறி , பால் வியாபாரம் செய்யும் மக்களுக்காக அப்போது கலெக்டராக இருந்த பால் (PAUL ) ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அவரின் பெயரிலேயே இன்றும் பால் மார்கெட் என்றே அழைக்கப் படுகிறது.
➨ இன்றைய கருவாட்டுப் பாலம் பகுதியில் வசித்துவந்த கீழ்தட்டு மக்களின் குடிசைகள் வெள்ளம் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்பட்டன. அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான்சன் (JOHNSON) என்பவர் அந்த மக்களுக்காக ஒரு பேட்டையை (குடியிருப்பு ) உருவாக்கினார் . அது இன்றும் அவர் பெயரால் ஜான்சன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.
➨ தமிழகத்தின் பழமையான சோடா கம்பெனி சேலத்தில் ஆங்கிலேய வியாபாரி வின்சென்ட் (VINCENT) என்பவர் உருவாக்கிய வின்சென்ட் சோடா கம்பெனி . பின் இந்தியர் வசம் வந்தது. இன்றும் அந்த கம்பெனி இருந்த பகுதி வின்சென்ட் என்றே அழைக்கிறோம். அதே நேரம் வின்சென்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் பெயர் என்றும் சொல்லப் படுகிறது.
இவை மற்றும் அன்றி இன்று உள்ள லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ், கன் பயரிங் ஸ்ட்ரீட் (குண்டு போடும் தெரு) போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வைத்தவை .
சேலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரிகள் பலர் ஓய்வுக்கு பிறகும் சேலத்திலேயே வாழ்ந்து மறைந்தனர். அவர்களின் கல்லறைகள் இன்றும் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே மாட்டு ஆஸ்பத்ரி அருகிலும், ஏற்காட்டிலும் உள்ளன.
ஆங்கிலேயருக்கு பிறகு , ராஜாஜி , சுதந்திரபோராட்ட வீரர் விஜயகோபாலாசாரி போன்ற தலைவர்கள் , எம்ஜியார், கருணாநிதி , கண்ணதாசன் போன்றோரை உருவாக்கிய மாடர்ன் தியேட்டர் சுந்தரம் … போன்ற பல தலைவர்கள் சேலத்திற்கு பெருமை சேர்த்தனர்.
தகவல்: வாழப்பாடி இராமசுகந்தன்