திருச்செந்தூர்:

முருக பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை விடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் விமரிசையாக துவங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு  கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது.   வரும் 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு  இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 5:30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள நாடு முழுவதும் இருந்து ஏராளமான  முருக பக்தர்கள் செந்தூரில் குவிந்து வருகின்றனர். அங்குள்ள கடலில் புனித நீராடி சாமியை வழிபட்டு சஷ்டி விரதத்தை துவக்கியுள்ளனர்.

கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 2 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.