திருப்பதி
நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கீழ்த் திருப்பதி நகரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ள திருமலையில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும், நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டன.
தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்ற இக்கூட்டத்தில் அறங்காவலர் குழு எடுத்த தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம், ”திருமலை பிரம்மோற்சவ விழாவினை சிறப்பாக செய்து முடித்த தேவஸ்தான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரமும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.6,850-ம் போனசாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 மாதத்தில் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் முழுவதுமாக தடை செய்யப்படும். திருமலை, திருப்பதி ஆகிய இரு நகரங்களும் புனித திருத்தல நகரங்களாக விளங்கி வருவதால் திருப்பதி நகரிலும் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பப்படும். விரைவில் அரசு இது குறித்து நல்ல முடிவெடுக்கும் என நம்புகிறேன்.
தற்போது திருப்பதியில் கட்டப்பட்டு வரும் கருடா மேம்பாலம் சில மாற்றங்களுடன் மறு டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். தவிர தேவஸ்தான எல்லைக்குள் பணியாற்றும் 162 தற்காலிக வனத்துறை ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அரசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.