சென்னை: மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அறிவிக்கப்படும் விடுமுறைகள் தனியார் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

“எனது இறப்பிற்காக விடுமுறை அறிவிக்காதீர்கள், என்மீது அன்பிருந்தால், அதற்குப் பதிலாக ஒரு நாள் அதிகமாக வேலை செய்யுங்கள்“, என்றார் அப்துல்கலாம். தற்போது, அரசு அறிவித்த விடுமுறைகள் மற்றும் அப்துல்கலாம் மறைவு நாளை முன்னிட்டு அறிவித்த மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படியான விடுமுறைகள் குறித்து தெளிவாக்கியுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

நீதியரசர் எஸ்.எம். சுப்ரமணியம் ஓசூரில் செயல்படும் பைமெட்டல் பேரிங் என்ற தொழிற்சாலையின் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில், இத்தகைய தீர்ப்பை கூறியிருக்கின்றனர். மேலும், அது சார்ந்த சில விஷயங்களையும் அவர் தெளிவாக்கியுள்ளார்.

மேற்குறிப்பிட்டத் தொழிற்சாலையில், கடந்த 30 ஜுலை 2015 அன்று, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் விடுமுறை அறிவித்தது.

ஆனால், அவ்வறிவிப்பு, முதல் ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதற்காகத் தொடரப்பட்ட வழக்கின் மறு விசாரணையில்தான் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.