டில்லி:
என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது,  மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது,  இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது. இதற்கு, சிதம்பரத்தின்  மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி பெற்றதாகவும், இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும். இதற்கு பிரதிபலனாக மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரம் நிறுவனத் திற்கு பணம் வந்துள்ளதாகவும்  சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்தின்  வலியுறுத்தலின்பேரில், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேட்டிற்கு உதவியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.

இதற்கிடையில், இந்திராணி – பீட்டர் முகர்ஜி தம்பதிகள், தங்களது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்ட்டனர்.  இதில், இந்திராணி முகர்ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறுவதாக நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்.  அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, கடந்த மாதம் 21ம் தேதி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தது. தற்போது ப.சிதம்பரம், அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளன. குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் வரும் 21ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.