மங்களூரு
பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலை மரணம் அடைந்தார்.
டூயட் என்னும் படத்தை நினைவு வைத்திருப்போரால் கத்ரி கோபால்நாத் வாசிக்கும் சாக்சபோன் இசையையும் மறக்க முடியாது. அந்த படத்தின் பாடல்களுக்கு இசை அளித்து ஏ ஆர் ரகுமான் என்றாலும் அதற்கு உயிர் அளித்தது கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை என்பதை யாரும் மறுக்க முடியாது. கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் பந்த்வால் தாலுகவில் உள்ள மிட்டகெரே என்னும் ஊரில் கடந்த 1950 ஆம் ஆண்டு பிறந்தார்.
சாக்சபோன் இசையில் உச்சத்தைத் தொட்ட கத்ரி கோபால்நாத் தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய இரு மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி இசை அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்த கத்ரி கோபால்நாத் மங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதவிங்கடி என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
அவரது குடும்பத்தினர் குவைத்தில் உள்ள அவரது மகன் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். அவர் மறைவு தென் இந்தியத் திரை உலகை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு சமூக வலைதளங்களைல் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.