புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் 3 முக்கியத் தலைவர்களுக்காக சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகும் விமானம் அடுத்த ஆண்டில் இந்தியா வந்தடையும் என்று அதிகார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டதூரம் செல்லக்கூடிய போயிங் 777-300ER என்று அழைக்கப்படக்கூடிய இந்த விமானம் அமெரிக்காவில் தயாராகிறது. அடுத்தாண்டு ஜுன் மாதம் இது இந்தியா வந்தடையும் என்று கூறப்படுகிறது.

இந்த விமானம் அமெரிக்க அதிபர் பயன்படுத்தக்கூடிய போயிங் 747-200B என்ற விமானத்தைப் போலவே பாதுகாப்பு வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்காக இந்த விமானம் அர்ப்பணிக்கப்படும்.

இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், இந்த விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இராது. மாறாக, இந்திய விமானப் படையின் பராமரிப்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதுதான். எனவே, இந்த விமானம் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக ஏர் ‍‍ஃபோர்ஸ் ஒன் என்று அழைக்கப்படும்.

எதிரிகளின் ராடார்களுக்கு சிக்காமல், வெப்ப உணரி ஏவுகணைகளை சமாளிக்கும் வகையிலான அம்சங்கள் இதில் உண்டு. உலகெங்கிலும் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் அதிகரித்திருக்கும் சூழலில், அதனிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.