சென்னை

மிழக அரசு கல்வித்துறை ஆசிரியர்களிடம் இருந்து சில விவரங்கள் கேட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.   மாணவர்களையும் பெற்றோர்களையும் கவர ஆங்கில மீடியம் கல்வி முறை அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன.   அத்துடன் தனியார் நர்சரி பள்ளிகளைப் போல் எல் கே ஜி மற்றும் யு கே ஜி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   இவர்களிடம் தமிழகக் கல்வித் துறை ஒரு சில கேள்விகளைக் கேட்டுள்ளது.   அதில் குறிப்பாக ஆசிரியர்களின் குழந்தைகளின் கல்வி பற்றி கேட்கப்பட்டுள்ளது.   ஆசிரியர்களின் குழந்தைகளில் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் இடையே இது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இது அரசுப் பள்ளி  ஆசிரியர்களைச் சிறுமைப் படுத்த முயலும் செயல் என பல ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.    இதைப் போல் அனைத்து அரசு ஊழியர்களிடமும் கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் தாங்கள் வரவேற்றிருப்போம் என கூறி உள்ளனர்.    கல்வித் துறை வட்டாரங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளில் 1% பேர் கூட அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை எனக் கூறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம், “ஆசிரியர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,  ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை.  அவ்வாறு சேர்க்கப்பட்டால் தனியார்ப் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் மேம்பட்டு விளங்கும்.  தற்போதுள்ள நிலையில் பல பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  சரியான கட்டமைப்பு, கழிப்பறை வசதிகள் எதுவும் அரசுப் பள்ளிகளில் இல்லை” என தெரிவித்துள்ளார்.