சேலம்: அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் நிகழும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.

அந்த விடுதியின் சமையல்காரராகவோ அல்லது வாட்ச்மேனாகவோ பணியாற்றும் ஆண்கள், விடுதி வார்டன் பொறுப்பையும் கூடுதலாக ஏற்பதால் இப்பிரச்சினை நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அந்நிய ஆண்களின் கருணையில் கல்வி கற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், சேலம் மாவட்டம் கல்ராயன் மலையில் அமைந்த பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில், சமையல்காரராகவும், விடுதி வார்டனாகவும் பணிபுரிந்த பூபாலன் என்பவர், தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக நோட்டுப் புத்தக தாளில் எழுதப்பட்ட புகார் மனுக்கள் சேலம் ஆட்சியரை வந்தடைந்தன.

ஆனால், வெறும் எச்சரிக்கையுடன், மேல்நிலைப் பள்ளி ஒன்றுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார் பூபாலன். அதுதான் அவருக்கு தரப்பட்ட தண்டனை.

கோவை, ஈரோடு, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்த அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகள் பலவற்றில் இப்பிரச்சினை நிலவுவது தெரியவந்துள்ளது. அந்தப் பள்ளியின் விடுதிகளுக்கு சமையல்காரராக இருப்பவர் மற்றும் வாட்ச்மேனாக இருப்பவரே, விடுதி வார்டன் பொறுப்புக்கு பணியமர்த்தப்படுவதால் இத்தகையப் பிரச்சினைகள் தொடர்கதையாகின்றன.