சென்னை
வறண்டு கிடந்த சென்னையில் தற்போது நல்ல மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் இரண்டடி வரையில் உயர்ந்துள்ளது.

இந்த வருடம் கோடைக்கால தொடக்கத்துக்கு முன்பு இருந்தே கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வந்தது. அனைத்து நீர் நிலைகளும் வரண்டு காணப்பட்டன. இதனால் மக்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக லாரிகள் மட்டுமே இருந்து வந்தது.
மக்கள் மழைக்காக மிகவும் வருந்தினர். பல இடங்களில் மழை வேண்டி பிரார்த்தனை நடந்து. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்ததால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சி ஆகஸ்ட் மாதமும் தொடர்ந்தது.
நிலத்தடி நீர் மட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. இது மக்களுக்கு மிகவும் மகிழ்வை உண்டாக்கியது. அந்த மழை செப்டம்பரிலும் தொடரவே நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நகரின் நீர் மட்டம் சராசரியாக 2 மீட்டருக்கும் மேல் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் பெய்த மழையால் மைலாப்பூர், விருகம்பாக்கம், கோட்டூர்புரம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. முழுவதுமாக வறண்டு போயிருந்த பகுதிகளான கோயம்பேடு மற்றும் சூளைமேடு பகுதிகளிலும் தற்போது நிலத்தடி நீர் மீண்டும் வரத் தொடங்கி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மக்கள் மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதே ஆகும். பல கட்டிடங்களின் தண்ணீர் தேவைகள் முழுக்க முழுக்க மழைநீர் சேகரிப்பின் மூலமே நடந்துள்ளன. ராயப்பேட்டை பகுதியில் மழைநீர் சேகரிப்பு கடந்த 2 வருடங்களாகவே மேம்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு நீர் பஞ்சம் அதிக அளவில் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.