ரியாத்
வுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்குத் தாம் உத்தரவிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி, அன்று ஜமால் கஷோகி தனது துருக்கி காதலியைத் திருமணம் செய்யத் தேவையான ஆவணத்தைச் சேகரிக்க, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்தின் உள்ளே கஷோகி கொல்லப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறைக்கப்பட்டது. இதுவரை அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. சவுதி அரேபியா இந்த படுகொலையில் 11 பேர் மீது குற்றம்சாட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
ஐநா சபை இந்த கொலைக்கு சவுதி அரேபியா பொறுப்பேற்கவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் இளவரசர் முகமது சல்மானின் பங்கை விசாரிக்கவேண்டும் என்றும் கூறி இருந்தது. அத்துடன் அமெரிக்க காங்கிரஸ் இந்த கொலைக்கு இளவரசரே காரணம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது அதே வேளையில் பட்டத்து இளவரசர் சல்மான் நீண்ட காலமாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
சமீபத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார். அந்தப் பேட்டியில் இளவரசர் சல்மான்,”ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது ஒரு கொடூரமான குற்றம். நான் சவுதி அரேபியாவின் ஒரு தலைவர் என்னும் முறையில் இந்த கொலைக்குப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தக் கொலை சவுதி அரேபிய அரசாங்கத்திற்காக பணியாற்றும் தனிநபர்களால் செய்யப்பட்டுள்ளது ஆனால் நான் இந்த கொலைக்கு உத்தரவிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.