சென்னை

ற்பத்திக் குறைவால் விடுமுறை அறிவித்திருந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 5 தினங்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தித் துறையில் கடும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.   வாகன விற்பனையின் கடும் வீழ்ச்சியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  இதையொட்டி மத்திய நிதி அமைச்சர் தற்போது பொருளாதார வீழ்ச்சி குறைந்துள்ளதாக அறிவித்தார்.   அதே தினத்தன்று விற்பனை குறைவு காரணமாக அசோக் லேலண்ட் விடுமுறை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனம் உற்பத்திக் குறைவைக் காரணம் காட்டி விடுமுறை அளித்துள்ளது.  தற்போது சென்னை மற்றும் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்திக் குறைவை அறிவித்துள்ளது.   அதனால் நாளை முதல் சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களிலும் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் தொழிலாளர்களுக்கு முழு மாத ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.   ஆனால் ஊக்கத்தொகை அளிக்கப்பட மாட்டாது என தெரிய வந்துள்ளது.   அத்துடன் இனி மாதந்தோறும் 8 நாட்கள் மட்டுமே ஆலையை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.