சென்னை

மிழகத்தில் தற்போது மின் தேவை குறைந்து வருவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எப்போது மின் தேவை அதிக அளவில் இருப்பது வழக்கமாகும்.   இதற்கு முக்கிய காரணம் மாநிலத்தில் உள்ள பல தொழிற்சாலைகளே ஆகும்.  முன்பு மின் பற்றாக்குறை இருந்ததால் தமிழக தொழிற்சாலைகள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது.  ஆனால் தற்போது  மின் உற்பத்தி போதுமான அளவில் இருக்கும் போது மின் தேவை குறைந்துள்ளதாகத் தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை மின் தேவை சென்ற ஆண்டை விட 1.5% குறைந்துள்ளது.    குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் சென்ற வருடம் மின் தேவை 93.78 லட்சம் யூனிட்டுகளாக இருந்த நிலையில் இந்த வருடம் அதே மாதத்தில் மின் தேவை 4% குறைந்து  89.83 லட்சம் யூனிட்டுகள் ஆகி உள்ளது.   அதைப் போல் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அதிக பட்ச உபயோக நேரத்தில் 14787 மெகா வாட் தேவை இருந்தது.   அது இந்த வருடம்  14576  மெகா வாட் ஆக குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையால்  பல தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளதாகும்.    குறிப்பாக வாகனத் துறையில் முன்னோடிகளாக விளங்கும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது வேலை நேரத்தை வெகுவாக குறைத்துள்ளது.    அதே நேரத்தில் இந்த மின் தேவைக் குறைவு தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.