சென்னை:

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு எதிரொலியாக மாமல்லபுரம், கோவளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள்  அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து கோவளம் பகுதியில் நடைபெற்று வரும் சர்ஃபிங் எனப்படும் அலைசறுக்கு விளையாட்டுக்கு 20 நாட்கள் காவல்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா வரும் ஜிஜின்பிங், மோடி இடையிலான சந்திப்பு, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. கோவளம் பகுதியில் உள்ள பிஷர்மேன் கோவ் ரிசார்ட் என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

இதன் காரணமாக,  கோவளம் பகுதியில் உளள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலி புரம் சாலை ஆகியவற்றில் பாது காப்பு பலப்படுத்தப் பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப் புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் வருகையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், சாலைகளில் இடையூறு ஏற்படுவதை தடுப் பதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கடற்பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல கோவளம் பகுதியில் நடைபெற்று வரும் சர்ஃபிங் எனப்படும் அலைசறுக்கு விளையாட்டுக்கு 20 நாட்கள் காவல்துறை யினர் தடை விதித்து உள்ளனர்.  அலைசறுப்பு விளையாட்டை கற்றுத்தருபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 20 நாட்கள் அந்த பகுதிக்கு வரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இரு தலைவர்களும் வரும் அக்.11-ல், கோவளம் வர உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர்கள் 12-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களை பார்வையிட உள்ளதாக வருவாய் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதனால், கடற் கரை மற்றும் கல்பாக்கம் முதல் கோவளம் வரையிலான பகுதிக ளில் போலீஸார் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ள னர். இருவரும் கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக கூறப்பட்டாலும், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதி மற்றும் பூஞ்சேரி பகுதியில் உள்ள சொகுசு விடுதி களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.