டில்லி

வேத பாடங்களில் தேர்ச்சி பெற்ற 16 வயது மாணவர் பிரியவ்ரதாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களுடன் பிரிய்வ்ரதா

இந்து மத வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை நடத்தும் வேத பாடசாலைகளுக்கு அரசு சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.   இந்த வேத பாடசாலைகள் பொதுவாகக் குருகுல முறையில் நடந்து வருகின்றன.    இந்த தேர்வுகள் 14 படிகளாக நடத்தப்படுகின்றன.  வருடத்துக்கு இருமுறை நடைபெறும் இந்த தேர்வில் மிக உயர்ந்த நிலை தேர்வாக மகாபரிக்‌ஷா என்னும் தேர்வு உள்ளது.

அவ்வகையில் தேவதத்தா பாடில் மற்றும் அவர் மனைவி அபர்ணாவின் மகனான பிரியவ்ரதா என்னும் 16 வயது சிறுவன் தனது தந்தையிடம் வேதம் மற்றும் சாஸ்திரங்களைக் கற்றுள்ளார்.  அத்துடன் அவர் மோகன் சர்மா என்பவரின் வேதபாடசாலை குருகுலத்தில் கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை கற்றுத் தேர்வு எழுதி உள்ளார்.

சமீபத்தில் அவர் 14 ஆம் நிலை மற்றும் மிக உயரிய தேர்வான மகாபரிக்‌ஷாவில் தேர்ச்சி பெற்றுள்ளார்.  இந்த 14 ஆம் நிலத் தேர்வை இவ்வளவு சிறுவயதில் முடித்து தேர்ச்சி பெற்ற முதல் மாணவர் பிரியவ்ரதா ஆவார்.   இது குறித்து சாமு கிருஷ்ண சாஸ்திரி என்னும் வேத அறிஞர் தனது டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தனது தகவலில் அவர் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுள்ளார்.  அதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “மிகவும் அபாரம்.  பிரியவ்ரதாவுக்கு எனது பாராட்டுக்கள்.   இவருடைய இந்த சாதனை மேலும் பலருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.” என பாராட்டி உள்ளார்.