சென்னை:

’சந்திரயான்2 திட்டம் தோல்வி அல்ல’ என்று சந்திராயன்1 விண்வெளி திட்டத்தை வெற்றிகரமான நடத்தி சாதனை படைத்த முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார்.

வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2, நிலவை சுற்றி வந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள், சந்திரயானில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் சாதனம் நிலவில் கால் பதிக்கும் என உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், இந்தியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக, தரையில் இறங்க உள்ள  சில மணித்துணிகள் முன்பு லேண்டர் விண்கலத்தில் இருந்து வரும் தகவல் துண்டிக்கப்பட்டது.

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர். தகவல் துண்டிக்கப்பட்டது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சந்திரயான்1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை கூறியதாவது,

விக்ரம் லேண்டர் தகவல் துண்டிக்கப்பட்டது தொடர்பாக,  முதல்கட்டமாக கிடைத்திருக்கும் தகவல்களின் படி, நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் வரும்போது விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள்  துண்டிக்கப்பட்டு உள்ளது. அதே சமயத்தில், அதன் பாதை, சற்றே . விலகுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை பார்த்தோம்.. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1) நிலவை நெருங்க நெருக்க லேண்டரின் வேகம் குறைக்கப்படும். அதற்காக 800 நியூட்டன் திறனுள்ள இயந்திரங்கள் இதற்காக இயக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், லேண்டர் செல்லும் திசைக்கு எதிராக இயங்கும். அப்படி வேகம் குறையும் நேரத்தில், அதன் பாதையில்  மாறுபாடு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

இது அந்த இயந்திரங்களில் உள்ள சென்சார் பழுது காரணமாக இருக்கலாம் அல்லது, ஏதாவது ஒரு இயந்திரம் பழுதடைந்து, மற்ற இயந்திரங்கள் இயங்காத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்  இதன் காரணமாக லேண்டரின் திசை மாறியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் எல்லா டெலிமெட்ரி தகவல்களும் கிடைத்த பிறகு, அதனை ஆராய்ந்து பார்த்துத்தான் முழு விவரங்களைச் சொல்ல முடியும் என்றார்.

மேலும், லேண்டர்  வேறு திசையில் திரும்பியிருந்தால் நமக்கு சமிக்ஞை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறியவர், இறங்கும்போது சிக்னல் அனுப்புவதைப்போல தரையிறங்கியிருந்தால் சிக்னல் கிடைக்க வாய்ப்பு உள்ளது, என்றவர், 2008ல் அனுப்பப்பட்ட சந்திரயான் 1ஐப் பொறுத்த வரை அதிலிருந்து எந்தவித தகவல் பரிமாற்றம் இல்லாத நிலையில், இன்னும் நிலவைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

தற்போது நிலவில் இறங்கி உள்ள லேண்டர் குறித்து ஓரிரு நாளில் விவரம் தெரிய வரும் என்ற கூறியவர், அது தொடர்பான படங்களை ஆராய்ந்தால் விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினார்.

தற்போதைய நிலையில்,  நாம் மீண்டும் ஒரு லேண்டர் கருவியை மட்டும் தயாரித்து அனுப்பி னால் போதுமானதாக இருக்கும் என்று கூறியவர், அதற்கான செலவு சில நூறு கோடி ரூபாய் களில்  முடிந்து விடும் என்றவர்,  அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்டம் முழுவதும் தோல்வி அல்ல என்று கூறிய அண்ணாதுரை, சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இது இன்னும் சில ஆண்டுகள் இயங்கும் தன்மை உடையது. அதற்குள், புதிய லாண்டர் தயார் செய்து அனுப்பினால், மீண்டும் லேண்டரை நிலவில் தரையிறக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு ஒரு சிறிய பின்னடைவுதான் என்றாலும்,  இதை பாடமாக வைத்துக்கொண்டு நம்மால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபோன்ற சில சவால் தரும் திட்டங்களில் சறுக்கல்கள் ஏற்கப்படுவது தவிர்க்க முடியாதவை என்று கூறியவர், ஏற்கனவே  எஸ்எல்வி – 3 கூட முதலில் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால், நாம்  அதிலிருந்து மேலே சென்று வெற்றியடைந்தோம். பின்னர், எஸ்எல்வியிலிருந்து ஏஎஸ்எல்வி, அதற்குப் பிறகு பிஎஸ்எல்வி, அதிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 1, 2, 3 என முன்னேறி யிருக்கிறோம் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

சந்திரயான்-2  நிலவுக்கு 2 கி.மீ.வரை எல்லாம் ஒழுங்காகச் சென்றிருக்கிறது. அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை டெலிமெட்ரி வைத்து கண்டுபிடிக்க முடியும் என்றவர்,  அதுவொரு சிறிய பிழை யாக இருக்கலாம். அதைச் சரிசெய்தால் திட்டத்தில் முன்னோக்கி நகர முடியும் என்று தெரிவித்தவர்,  டெலிமெட்ரி தகவல்களை வைத்து ஓரிரு வாரங்களில் தவறு எங்கே நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார்.

இஸ்ரோவில் உள்ள ஃபெய்லியர் அனாலிசிஸ் கமிட்டி இதனை ஆராயும். அதற்குப் பிறகு புதிய திட்டத்தில் அந்தக் குறை சரிசெய்யப்படும் என்று கூறியவர்,  சந்திரயான் 1 திட்டத்தில் செய்தித் தொடர்பு ஒரு கட்டத்தில் துண்டிக்கப்பட்ட செயல், தங்களுக்கு செய்தித் தொடர்பு துண்டிக்கப்படு வதற்கு முன்பாகவே தெரிந்துவிட்டது என்றவர், அது முழுவதுமாக செயலிழப்பதற்கு முன்பாக எவ்வளவு தகவல்களை எடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு தகவல்களை அதிலிருந்து பெற்றோம், அதன் மூலம்தான், நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தோம் என்றும் தெரிவித்தார்.

இப்போதும் சந்திரயான் ஆர்பிட்டர் இன்னும் இயங்குகிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை யில் இருந்து கற்ற பாடத்தை எடுத்துக்கொண்டு, இனிமேல் தயாரிக்கப்படும் லேண்டர்கள் மேலும் சிறப்பானதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.