டில்லி

கேரள அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச அரிசி வழங்க விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகப் பலர் வீடுகளை இழந்துள்ளனர். இருக்க இடமில்லாத மக்கள் தற்போது உணவுக்கும் வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே கேரள மாநில அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 கிலோ இலவச அரிசி வழங்க உள்ளதாக அறிவித்தது.  ஆயினும் போதுமான அரிசி இருப்பு இல்லாததால் சுமார் 4.68 லட்சம் குடும்பத்தினருக்கு அரிசி வழங்க முடியாத நிலை உள்ளது.

கேரள அரசு தங்கள் மாநில மக்களுக்கு உணவு வசதிக்காக இலவச அரசி வழங்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அத்துடன் அதிகப்படி அரிசித் தேவைக்காக ரூ.3 சலுகை விலையில் அரிசி வழங்குமாறும் அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த இரு கோரிக்கைகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக ஒரு கிலோ அரிசி ரூ.26 என்னும்  விலையில் அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்திடம் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்ட போதும் போதிய நிவாரணம் அளிக்காத மத்திய அரசு வெள்ளமே ஏற்படாத உத்திரப் பிரதேசத்துக்கு ரூ.200 கோடி நிவாரண நிதியைச் சென்ற வருடம் அளித்துள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

கடந்த 2018 ஆம் வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் மத்திய அரசு இலவச அரிசி அளிக்க மறுத்து கிலோ ரூ.25 வீதம் அளிக்கப்பட்டதாகக் கூறியது. இதற்கான பணத்தைக் கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்க உள்ள ரூ.500 கோடி நிதி உதவியில் இருந்து கழித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய கேரள  முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிறகு அந்த நிலுவைத் தொகையை ரத்து செய்ய ஒப்புக் கொண்டது.