டில்லி:
தமிழகஅரசின் ஊழல் குறித்து விவாதம் நடத்தியதால், அரசு கேபிளில் இருந்து சத்தியம் டிவி ஒளிரபப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசுகேபிள் டிவிக்கு தீர்ப்பாய்ம ரூ.5000 அபராதம் விதித்தது.
கடந்த மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், `சென்னை, மதுரை போன்ற பெரு மாநகராட்சிகளில் ஊழல் அதிகமாகிவிட்டது. இதனால் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளை பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக மாநகராட்சி கமிஷனர் அம்பலப்படுத்த வேண்டும்” என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பாக சத்தியம் டிவியில் கடந்த மாதம் 11-ம் தேதி “மதுரை மாநகராட்சி ஊழல், தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவார்களா அதிகாரிகள்?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இதையறிந்த அரசு அதிகாரிகள் அன்று இரவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் சத்தியம் தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்தனர்.
எந்தவித முன்னறிவிப்பு இன்றி சத்தியம் டிவி தடை செய்யப்பட்டதால், இது தொடர்பாக நேயர்கள் 3 பேர் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் (TDSAT) வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து அரசு கேபிள் டிவியில் மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது. இடையில் சத்தியம் தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்ததற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்ரேஷனுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து தொலைத்தொடர்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு TDSAT அபராதம் விதித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.