ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன சட்ம் 370-வது பிரிவு நீக்கப்பட்ட செயல் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும், காஷ்மீர் மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகம் முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாரதியஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததுபோல, தற்போத  காஷ்மீர் மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றினார்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மத்தியஅரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த முடிவு தன்னிச்சையானது, அதிர்ச்சி அளிக்கக்கூடியது. காஷ்மீர் மாநிலம், கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தபோது, இந்தியா மீது காஷ்மீர் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு மொத்தமாக மோடி அரசு துரோகம் செய்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது தொடர்பான விதிமுறைகள், 370 மற்றும் 35ஏ பிரிவுகளில்தான் கூறப்பட்டுள்ளன. அந்த பிரிவுகளை நீக்கி இருப்பது, காஷ்மீர் இணைப்பு குறித்த அடிப்படை கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த முடிவு, சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

இந்த படுபாதகமான முடிவை எடுப்பதற்குத்தான், கடந்த சில நாட்களாக இந்திய அரசு, வஞ்சகமாக களத்தை தயார் செய்து வந்தது. காஷ்மீர் மக்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்கும் எங்களைப் போன்றவர்கள், காவலில் வைக்கப்பட்டனர். ஆனால், லட்சக்கணக்கான பாதுகாப்பு படையினர் தெருக்களில் குவிக்கப்பட்டனர். பெரிய அளவில் எந்த திட்டமிடலும் செய்யவில்லை என்று இந்திய அரசும், காஷ்மீரில் உள்ள அதன் பிரதிநிதிகளும் பொய் சொல்லி வந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்கள் அச்சம் உண்மையாகிவிட்டது. இதை தேசிய மாநாட்டுக் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

இந்த முடிவு, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது, காஷ்மீர் மக்கள் மீதான அத்துமீறல் நடவடிக்கை. இதறகாக நீண்டகால, கடுமையான போராட்டம் காத்திருக்கிறது. அதற்கு நாம் தயாராவோம்..

இவ்வாறு உமர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.