2006-ம் ஆண்டு கேரளாவில் நடந்த சாலைத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, கேரள லஞ்ச ஒழிப்புத் துறை (Vigilance and Anti-Corruption Bureau) விரைவில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்க உள்ளது. அப்போது கேரள பொதுப்பணித்துறை (PWD) செயலாளராக இருந்தவர், தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மலையின்கீழு வேணுகோபால் அளித்த புகாரை, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலாவின் அலுவலகம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பியுள்ளது.

இந்தப் புகார், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட கேரள மாநில போக்குவரத்துத் திட்டம் (KSTP) தொடர்பானது. இந்தியா-மலேசியா கூட்டு நிறுவனமான PATI-BEL மேற்கொண்ட இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், திட்டத்தை கண்காணித்த ஞானேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது புகார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள், அந்தத் திட்டத்தின் தலைமை திட்ட மேலாளராக இருந்த மலேசிய பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து எழுந்தன.

2006 நவம்பர் 11-ம் தேதி, மலேசியாவின் சுபாங் ஜெயா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இரும்புப் பாலத்தில் லீ சீ பீன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலைக்கு முன்பு அவர் இரண்டு கடிதங்களை எழுதியதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றை PATI நிறுவன இயக்குநர் ரோஸ் லீக்கும், மற்றொன்றை தனது மனைவிக்கும் எழுதியிருந்தார்.

ரோஸ் லீக்கு எழுதிய கடிதத்தில், “என்னால் இந்த அளவுக்கு அழுத்தத்தை தாங்க முடியவில்லை. இனி கேரளாவுக்குத் திரும்பப் போவதில்லை. அங்குள்ள அதிகாரிகளுடன் பணியாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. இந்தத் திட்டம் சரியான நேரத்தில் முடியாது என நினைக்கிறேன். எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்ததாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை துரத்திச் சென்ற பத்திரிகையாளர்

லீ சீ பீனின் மரணம் அப்போது மலையாள பத்திரிகையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மலையாள மனோரமா நாளிதழில் சிறப்பு செய்தியாளராக இருந்த ஜி. வினோத், இந்த விவகாரத்தில் தொடர்ந்து புலனாய்வு செய்தார்.

சாலைத் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும், லீ சீ பீனின் தற்கொலை குறித்தும் அவர் தொடர் செய்திகளை வெளியிட்டார்.

லீ சீ பீனின் தற்கொலைக்குப் பின்னால் மிகப்பெரிய விவகாரம் இருக்கலாம் என சந்தேகித்த வினோத், இது தொடர்பாக விசாரிக்க மலேசியாவுக்கும் சென்றார்.

வினோத்தின் மனைவியும் ஏசியாநெட் நியூஸ் நிறுவனத்தின் நிர்வாக செய்தி ஆசிரியருமான சிந்து சூர்யகுமார் கூறுகையில், “புலனாய்வு செய்திகளில் வினோத் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஒரு செய்தியின் அனைத்து அம்சங்களையும் கண்டறிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயல்படுவார்” என்றார்.

மலேசியாவில் விசாரணை நடத்தும்போது தன்னை கண்காணித்ததாக வினோத் தன்னிடம் கூறியதாகவும், லீ சீ பீனின் குடும்பத்தினரைச் சந்திப்பதும் ஆபத்தானதாக இருந்ததாகவும் சிந்து நினைவுகூர்ந்துள்ளார்.

வினோத்தின் புலனாய்வு செய்தி தொடர் மலையாள மனோரமாவில் வெளியானது. அப்போது இது கேரள அரசியலில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

ரூ.215 கோடி சாலைத் திட்டம்

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட KSTP திட்டத்தின் கீழ், 127 கி.மீ. நீளமுள்ள MC சாலையை அமைக்க PATI-BEL நிறுவனத்துக்கு ரூ.215 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

ஆனால், சாலை அமைப்பதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை அப்போது ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு (LDF) உரிய நேரத்தில் முடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்டுமானப் பணிகள் தாமதமானதாக செய்தி தெரிவிக்கிறது.

இதன் காரணமாக சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் பில்கள் பொதுப்பணித்துறையில் நிலுவையில் இருந்ததாகவும், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஞானேஷ் குமார் உள்ளிட்ட சில அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக PATI-BEL தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லீ சீ பீன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மலேசிய போலீசார், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத்தின் செய்திகளுக்கு மீண்டும் முக்கியத்துவம்

அப்போது மலையாள மனோரமாவில் ஆசிரியராக இருந்த மேத்யூஸ் வர்கீஸ், வினோத் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

“மனோரமாவில் வெளியான அந்தத் தொடர் செய்திகள் கேரளாவில் பல அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தன. இந்தக் கதை எதிர்காலத்திலும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் என்று நாங்கள் அப்போதே கருதினோம்” என்று அவர் கூறியுள்ளார்.

மலேசியாவுக்கே செய்தியாளரை அனுப்பி இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரித்த ஒரே நாளிதழ் மலையாள மனோரமா என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்தில் செய்திகளை தொடர்ந்து படித்த கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் தரகன், “ஒவ்வொரு நாளும் மனோரமாவில் வரும் அடுத்த செய்திக்காக நாங்கள் காத்திருப்போம். வினோத்தின் செய்திகளில் லீ சீ பீனின் குடும்பத்தினர் கூறிய தகவல்களும், கேரள அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளும் அதிர்ச்சியளித்தன. ஆனால் பின்னர் இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கை இல்லாமல் விசாரணை முடங்கிவிட்டது” என்றார்.

ஞானேஷ் குமார் மீது மீண்டும் கவனம்

லீ சீ பீனின் தற்கொலைக் கடிதத்தில் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் சமீபத்தில் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஞானேஷ் குமார் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், லஞ்சம் கேட்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையும், அதிகாரி இடமாற்றமும் நடந்ததாக தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

2007-ம் ஆண்டு ஞானேஷ் குமார் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தலைமையிலான பாதுகாப்புத்துறையில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஜி. வினோத் 2025 டிசம்பரில் தனது 54-வது வயதில் உயிரிழந்தார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக பணியாற்றிய அவர், ராஷ்ட்ரதீபிகா நாளிதழில் தனது பணியைத் தொடங்கி, 2002-ல் மலையாள மனோரமாவில் சேர்ந்தார். பல பத்திரிகையாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

வினோத் அப்போது வெளியிட்ட புலனாய்வு செய்திகளும், மலையாள மனோரமா காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்களும் தற்போது நடைபெறவுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் எந்த அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கும் என்பது இனிதான் தெரியவரும்.

“லீ சீ பீனின் ஆன்மாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு பதில் கிடைக்க வேண்டும். அதனால்தான் இப்போது இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கலாம். அவரது குடும்பத்தினரை பதில் இல்லாமல் விட்டுவிட முடியாது. அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் இறுதியில் பொறுப்பேற்க வேண்டும்” என்று புகார் அளித்த மலையின்கீழு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

– நன்றி South First