சென்னை:
தமிழகத்தில் போதிய மழையின்மை காரணமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத் தின் தலைநகராம் சிங்காரச் சென்னையில் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டபடியால், கடல்நீர் புகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை பொய்த்துப் போனதாலும், ஆட்சியாளர்களின் அறிவின்மையாலும் சென்னையை சுற்றி உள்ள பல ஏரிகள் தண்ணீரின்றி வறட்டு போய் விட்டன. மேலும் பல ஏரிகள், குட்டைகள் பிளாட்டுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் உருமாறி விட்டன. இதன் காரணமாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
இந்திய வானிலை மையம்
கடந்த 2015ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு போதிய மழை இல்லை. இதுகுறித்து தெரிவித்து உள்ள இந்திய வானிலை மையம், இந்தியாவில் வட கிழக்கு பருவ மழையின் சராசரி மழைப்பொழிவு இந்த முறை 45 சதவீதம் குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் சராசரி அளவை விட 62 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல தென்மேற்கு பருவ மழையும், தமிழகத்தில் பெய்யக் கூடிய சராசரி அளவை விட 19 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.
மத்திய நீர்வளத்துறை
அதுபோல, மத்திய நீர்வளத்துறை கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வுகள் குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தமிழகம் முழுவதும் 1139 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றி விட்டது என்றும், 105 இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது என்று கூறி உள்ளது. மேலும், 35 இடங்களில் கடல்நீர் புகுந்து, நிலத்தடி நீரில் உப்பு சேர்ந்து முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்து விட்டது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தது.
நிதிஆயோக்
நிதி ஆயோக் தெரிவித்துள்ள தககவலின்படி, அடுத்த ஆண்டு (2020) சென்னை உள்பட நாடு முழுவதும் 21 நகரங்க ளில் நிலத்தடி நீர் கிடைக்காது என்றும், இதன் காரணமாக நாட்டில்10கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படு வார்கள் என்று எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில், ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரின் அளவு 18.59 பிசிஎம் அளவிலானது என்று தெரிவித்துள்ள நிலையில், இதில் 77 சதவிகிதத்துக்கும் அதிகமாக தற்போது பயன்படுத்தப்பட்டு விட்டது என்றும் கூறி உள்ளது. அதிகரிக்கும் நீர்த் தேவையால் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்டு வருவதாகவும், இதில் தமிழகமே முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது
தமிழகத்தில் உள்ள 32 தமிழக மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80 சதவிகிதத்துக்கும் மேலாகச் சுரண்டப்பட்டு விட்டதாகவும், மேலும் நிலத்தடி நீரை உறிஞ்சுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
கடல் நீர் புகும்….
இந்த நிலையில், சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 7 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில், 40அடியில் காணப்பட்ட நிலத்தடி நீர் மட்டம், கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு 70 அடியில் இருந்தது. தற்போது, நிலத்தடி நீர் மீட்டம் 150 அடியை தாண்டி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஆள்துழை கிணறுகளை தோண்டி தண்ணீரை உறிஞ்சி வருகின்றன.
சென்னையில் அதிகரித்து விரும் நீர் பற்றாக்குறை மாநகர மக்களை கதிகலங்க வைத்துள்ளது. சென்னையை சுற்றி உள்ள நீர் வழங்கும் அனைத்தும் ஏரிகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோன நிலையில், தற்போது, நிலத்தடி நீரில் கடல்நீர் புக வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.
சென்னை அடையாறு பகுதியில் 3.89 மீட்டரில் இருந்த நீர் மட்டம் தற்போது 6.75 ஆக அதிகரித்து உள்ளது.
அதுபோல ஓஎம்ஆர் சாலை அருகே உள்ள பெருங்குடியில் 4.35 மீட்டரில் இருந்த நீர்மட்டம் தற்போது 6.96 ஆக அதிகரித்து உள்ளது.
கடற்கரை அருகே உள்ள வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 4.26 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 7.65 ஆகவும், திருவெற்றியூரில் 3.46 மீட்டராக இருந்த நீர் மட்டம் 4.93 மீட்டராக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, வடசென்னையில் கடைசி பகுதியான மணலியில் நிலத்தடி நீர் மட்டம் 2.81 மீட்டரில் இருந்து தற்போது 5.14 மீட்டர் ஆகவும், மாதவரத்தில் 3.85 மீட்டரில் இருந்து 6.42 மீட்டர் ஆகவும், தண்டையாளர் பேட்டையில 3.84 இருந்து 7.51 மீட்டர் ஆகவும், திருவிக நகரில் 2.71 மீட்டரில் இருந்து 7.23 மீட்டர்ஆகவும், அம்பத்தூரில் 4.71 மீட்டரில் இருந்து 7.98 ஆகவும் உள்ளது.
அண்ணா நகர் பகுதியில் 3.82 மீட்டரில் இருந்த நீர்மட்டம் 6.44 ஆகவும், தேனாம்பேட்டை பகுதியில் 3.77 ஆக இருந்த நீர் மட்டம் இருந்து 6.49 ஆகவும், கோடம்பாக்கத்தில் 4.01ல் இருந்து 7.01ஆகவும், வளசரவாக்கத்தில் 3.88 மீட்டர் என்ற அளவில் இருந்த நிலத்தடி நீர் 6.92 என்ற அளவிற்கு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணம், ஒருபுறம் பெருகி வரும் கணக்கிலடங்கா அடுக்குமாடி வீடுகள் நிலத்தடி நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வருகின்றன. மற்றொரு புறம் சென்னையில் இருந்த சிறு குளங்கள், குட்டைகள், விளை நிலங்கள் அனைத்தும் வீடுகளாகவும், நிறுவனங்களாகவும், வணிக நிறுவனங்களாகவும் மாறிவிட்டன.
இதுபோன்ற காரணங்களால், அவ்வப்போது இயற்கை தரும் மழைநீரும், சேமிக்கப்படுவது தடுக்கப்பட்டு, வீணாக கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாகவே தற்போது நிலத்தடி நீரில் கடல்நீர் புக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன.