சிகாகுவா
அமெரிக்க மெக்சிகோ எல்லைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள சீ- சா விளையாட்டை இரு நாட்டு மக்களும் விளையாடி மகிழ்கின்றனர்
அமெரிக்காவின் உள்ளே வெளிநாட்டவர் எல்லை வழியாக நுழைவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் எல்லையில் பெரிய சுவர் எழுப்பத் திட்டமிட்டார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்படப்பட்டுள்ளது. தற்போது இரு நாட்டு எல்லையில் சிறு வேலி மட்டும் உள்ளது.
இந்த வேலியினால் எல்லைப் பகுதியில் வாழும் இரு நாட்டு மக்களும் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெற்றோர்கள் ஒரு நாட்டினுள்ளும் குழந்தைகள் மற்றொரு நாட்டிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் எல்லைப் பகுதியில் உள்ள இரு நாட்டு மக்களில் பலர் உறவினர்களாக உள்ளனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட இரு நாட்டினரையும் ஒன்றிணைக்க ரொனால்ட் ரேல் மற்றும் வர்ஜினிய சான் ஃப்ராடெலோ என்னும் பேராசிரியர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி எல்லை வேலியில் சீ-சா விளையாட்டு பலகையினை பொருத்தி உள்ளனர். சீ-சா என்னும் விளையாட்டில் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ள பலகையில் ஒவ்வொரு பக்கமும் ஒருவர் அமர்ந்து விளையாடுவார்கள். ஒரு பக்கம் அமர்ந்தவர் பலகையை அழுத்தும் போது மறுபக்கம் உள்ளவர் மேலே தூக்கப்படுவார். மறுபக்கம் உள்ளவர் அழுத்தும் போது இந்த பக்கத்தில் உள்ளவர் தூக்கப்படுவார்.
இவ்வாறு சீ-சா பலகை பொருத்தப்பட்டதற்கு இரு நாட்டு மக்களும் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ளனர். இந்த விளையாட்டைக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விளையாடி மகிழ்கின்றனர். எல்லையால் பிரிக்கப்பட்டாலும் விளையாட்டால் ஒன்று பட்டுள்ளதாக பல நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.