மயிலாடுதுறை:

யிலாடுதுறையில் நாளை முதல் (ஆகஸ்டு 1ந்தேதி) ஹெல்மெட் அணியாமல் வந்தால், வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் இருந்து தடுக்கப்பபடும் வகையில், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதை வாகன ஓட்டிகள் கடை பிடிக்க மறுத்து வரும் நிலையில், நீதிமன்றமும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது இரு சக்கரவாகனங்கள் பதியும்போது, அத்துடன் ஹெல்மெட் வாங்கப்பட்டதற்கான பில்லும் காண்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சில இடங்களில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் தர மாட்டோம் என்று சில பங்க் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அனைத்து பெட்ரோல் பங்க்-களிலும் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.   இந்த அறிவிப்புக்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும்  நடைபெற்ற சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், அதில்  ஹெல்மெட் அணியாததால்  உயிரிழந்தவர்கள்  73 சதவீதம் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.