சென்னை:
பொதுமக்கள் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி பெறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கும் மையங்கள் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டடிடங்கள் மற்றும் நிலங்களுக்கான அனுமதி தொடர்பாக சிஎம்டிஏ, டிடிசிபி நிர்வாகங்கள் எது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது, மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி பெறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கும் மையங்கள் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, நகர் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களிலும் தகவல் மற்றும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில், பொது தகவல் அலுவலர்கள், மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், திட்ட அனுமதி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், ஏற்கனவே கொடுத்துள்ள விண்ணப்பங்கள், பரிசீலனையில் உள்ள கோப்புகளின் நிலை குறித்த விவரங்களை அளித்தல், வாய்மொழியாக தகவல்களை கோருபவர்களுக்கு பதிவேடுகளை சரிபார்த்து தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன், பொதுமக்கள் நேரில் சென்று தகவல் பெறலாம், முடியாதவர்கள் தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனைகளை பெறும் வகையில், இந்த ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.