டில்லி:
நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்2 விண்கலம் இன்னும் நிலவை அடையாத நிலையில், சந்திரயான்2 எடுத்ததாக போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து பரபரப்பபை ஏற்படுத்தின. இந்த புகைப்படங்கள் அனைத்தும் போலியானது என்று இஸ்ரோ விளக்கம் அளித்து உள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் கடந்த 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது நிலவை நோக்கி பயணமாகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சந்திரயான்2 விண்கலம், விண்வெளியில் இருந்து பூமியை படம் பிடித்துள்ள தாக, பல புகைப் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படங்கள் பார்ப்பதற்கு, விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டது போல் இருந்த நிலையில், ஏராளமானோர் இதை உண்மை என்று நம்பியபோது, இஸ்ரோ, அந்த புகைப்படங்கள் அனைத்தும் போலியானது என்று தெளிவு படுத்தி உள்ளார்.
சமீபத்தில் சந்திரயான்2 எடுத்ததாக வெளியான படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சமயத்தில் வெளியானது என்றும், பல படங்கள் கிராபிக்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.