ஜெருசலேம்
இஸ்ரேல் நாட்டு பொதுத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நேதன்யாகு மோடி, டிரம்ப், புடின் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்தி உள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மும்முரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாடெங்கும் பல இடங்களில் உலகத் தலைவர்களுடன் தாம் உள்ள படங்களை பானர்களாக வைத்துள்ளார். அதில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருடன் நேதன்யாகு உள்ள படங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகப் புகழ் பெற்ற புடின் மற்றும் டிரம்ப் உடன் மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் ஒற்றுமை நிலவி வருகிறது.
அது மட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மோடியின் வெற்றிக்கு முதலில் வாழ்த்து அளித்த உலகத தலைவர் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.