டில்லி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் அளித்த நிதி மசோதாவை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் நிதி மசோதாவை அளித்துள்ளார். ஏற்கனவே அளிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை முதலாவதாகக் கொண்டால் இது இரண்டாம் அறிக்கை எனக் கூறலாம். இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ப சிதம்பரம், “பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் எவரும் இல்லாத நேரத்தில் ஒரு தனி தைரியம் தேவை. இதையே கடந்த ஜூலை 23 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்துள்ளார். அவர் தனது முதல் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாத நேரத்தில் தைரியமாக அளித்துள்ளார். வாழ்த்துக்கள் நிதி அமைசர் அவர்களே,
நிதி நிலை அறிக்கையைக் குறித்து பல கேள்விகள் உள்ளதைப் போல் இந்த நிதி மசோதாவைக் குறித்தும் கேள்விகள் உள்ளன.
முதலாவதாக இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டம் விதி எண் 110 இன்படி மட்டுமே நிதி மசோதா அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி புட்டா சாமி ஒரு தீர்ப்பில் கூறி உள்ளார். இத்தகைய மசோதாவில் வரிகள் குறித்த விவகாரங்கள் மற்றும் இந்தியக் கூட்டு நிதி அல்லது இந்திய பொது நிதி குறித்த ஒதுக்கீட்டு விவகாரங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள மசோதாவில் விதி எண் 110 இன் படி அனுமதிக்கப்படாத பல இனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இனங்கள் இதர செலவுகள் என குறிப்பிடப்பட்டு இதன் மூலம் ரிசர்வ் வங்கி விதி உள்ளிட்ட பல விதிகள் மீறப்பட்டுள்ளன. எனக்குத் தெரிந்த வரை 10 விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விதிகள் அனைத்தும் விதி எண் ௧௧௦ இன் கீழ் வராதவை ஆகும்.
இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என யாரும் வாதிட முடியும். இவ்வளவு முக்கியமான மசோதாவின் மீது அரசு எவ்வாறு ஒரு முன்னெச்சரிக்கை இன்றி நடந்துக் கொண்டுள்ளது என ஆச்சரியம் அடைகிறேன்.
அடுத்ததாக நான் ஏற்கனவே 21 ஆம் தேதி அளித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்து யாரும் எவ்வித தவறும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அரசு அளித்துள்ள வருமானத்துக்கான இலக்கு என்பது யாரும் ஒப்புக் கொள்ள முடியாத அளவில் உள்ளது. கடந்த 2018-19 ஆம் வருடத்துக்கான உண்மையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் 2019-20 வரையிலான எதிர்பார்க்கும் வளர்ச்சி கணக்கிடப்படாமல் உள்ளது.
இவ்வாறான அதிக அளவில் வருமான இலக்கை அரசு எப்படி அறிவிக்க முடியும்? குறிப்பாக ஐஎம்எஃப், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவைகள் இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 7% என அறிவித்துள்ளன. அதே நேரத்தில் உலக வளர்ச்சி 3.2% ஆக மட்டுமே உள்ளது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை ஒவ்வொரு பொருளாதார வல்லுநரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதைக் கடந்த நான்கு காலாண்டுகளின் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க அரசு எவ்வாறு இந்த வளர்ச்சி விகிதங்களை இரட்டிப்பாகக் காட்டுகிறது?
இந்த அரசு வரி செலுத்துவோரைக் கசக்கிப் பிழியும் என எனக்குத் தோன்றுகிறது. ஏற்கனவே இந்த அரசு வருமான வரித்துறை, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி அதிகாரிகளுக்கு ஏராளமான அதிகாரம் அளித்துள்ளது. இதனால் மேலும் பலருக்கு வரி பாக்கி நோட்டிசுகள், கைதுகள், குற்றச்சாட்டுக்கள், அபராதங்கள் என அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் வரி கொடுப்போர் கடும் உபத்திரவத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட உள்ளது.
மூன்றாவதாக, மாநில அரசுகளுக்கு அவர்களுடைய வரி பங்கு சரியாக அளிக்கப்படுகிறதா என ஒர் சந்தேகம் உள்ளது. 14 ஆம் நிதி ஆணையம் மத்திய அரசின் மொத்த வரி வருமானத்தில் 42% மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த பங்கு என்பது மாநிலங்களுக்கான சட்டபூர்வமான பங்கு ஆகும். ஆனால் இந்த பங்கைத் தவிர மத்திய அரசு மாநிலங்களுக்கு வேறு ஏதாவது அளித்துள்ளதா அல்லது இந்த பங்கையாவது முழுமையாக அளித்துள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் மொத்த வரி என்பது கல்விக்கான கூடுதல் வரி உள்ளிட பல கூடுதல் வரிகள் ஆகும். அதில் இருந்தும் மாநிலங்களுக்கு 42% அளிக்க வேண்டும். ஆனால் அரசு இந்த கூடுதல் வரிகளை மாநிலங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை. அது மட்டுமின்றி சென்ற 2018-19 ஆம் வருடம் எதிர்பார்த்த வரி வசூலான ரூ. 22.7 லட்சம் கோடியை விட 22.48 லட்சம் கோடியாகக் குறையும் போது மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கு குறைந்து விடுகிறது.
தயவு செய்து நிதி அமைச்சரின் பதிலை கவனியுங்கள். அவர் நான் ஏற்கனவே எழுப்பிய எவ்வித கஏள்விஅக்ளுக்கும் பதில் அளிக்கவில்லை. இப்போது மசோதா குறித்து நான் எழுப்பி உள்ள கேள்விகளுக்காவது மாநிலங்களவையில் விவாதம் நடத்துவாரா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.