டில்லி
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த ஆலோசனைக்காக அமித்ஷாவை சந்திக்க அம்மாநில பாஜக பிரதிநிதிகள் டில்லிக்கு வந்துள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி மஜத – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கில் தோல்வி அடைந்தது. அதையொட்டி கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாஜக தலைமையின் முடிவுக்காகக் காத்திருப்பதாக நேற்று பாஜகவின் தலைவர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இன்று கர்நாடக பாஜகவைச் சேர்ந்த ஜகதீஷ் ஷெட்டர், பசவரராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவலி உள்ளிட்ட பிரதிநிதிகள் டில்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அமித்ஷா வை சந்தித்து புதிய அரசு அமைக்க அமித்ஷாவுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
அப்போது ஜகதீஷ் ஷெட்ட்டர், “தற்போது கர்நாடக அரசியல் நிலை குறித்தும் அதில் எங்கள் கட்சியின் முடிவு குறித்தும் அறிய நாங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளோம். அதற்காகவே நாங்கள் டில்லிக்கு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு தலைவரான அரவிந்த் லிம்பாவலி, “நீங்கள் கர்நாடக மாநில நிலைமையை அறிவீர்கள். முந்தைய அரசு பெரும்பான்மை இழந்ததால் ராஜினாமா செய்து புதிய அரசு அமைக்கப்பட உள்ளது. நாங்கள் இதற்காக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்ய வந்துள்ளோம். எங்கள் கட்சியின் அனைத்து தலைவர்களின் ஆலோசனைகளையும் நாங்கள் கேட்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.