புதுடெல்லி: இந்தியன் பஸ்டர்ட் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் பறவை வகையை காக்க, மத்திய அரசின் சார்பில் ரூ.33.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.
கிரேட் இந்தியன் பஸ்டர்ட் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் பறவை வகை, இந்தியாவில் வெறும் 130 மட்டுமே எஞ்சியுள்ளது. விரைவாக அழிந்துவரும் பறவையினங்களில் இதுவும் ஒன்று. எனவே, இத்தகைய அழிந்துவரும் பறவையினங்களை காப்பதற்கு அரசின் சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
அமைச்சர் கூறியதாவது, “மத்திய நிதியளிப்புத் திட்டம் – ஒருங்கிணைந்த வன உயிரினங்கள் மேம்பாடு என்ற திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, 21 குறிப்பிட்ட அழிந்துவரும் வன உயிரிகளைக் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதியளிக்கப்பட்டுள்ளது.
“கிரேட் இந்தியன் பஸ்டர்ட் பாதுகாப்பு மற்றும் வாழிட மேம்பாடு” என்ற திட்டத்தின் கீழ், அழிந்துவரும் அந்தப் பறவையினங்களைப் பாதுகாக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ரூ.33.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.