அகமதாபாத்
குஜராத் மாநில பாஜகவின் டான் என கூறப்படும் தினு சோலங்கியின் வளர்ச்சியை குறித்த ஒரு சிறு தொகுப்பு
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி தகவல் ஆர்வலர் அமித் ஜேத்வா குஜராத் உயர்நீதிமன்றம் அருகே இருவரல் சுட்டுக் கொல்லப்பட்டார். குண்டடி பட்ட ஜேத்வா தன்னை சுட்டவரை பிடிக்க முயன்ற போது இருவரும் தப்பி விட்ட போதிலும் ஒருவருடைய மேல் சட்டை ஜேத்வாவிடம் சிக்கி உள்ளது. அதை வைத்து துப்பறிந்து கொலையாளிகள் கண்டறியபட்டனர்.
ஒன்பது வருடம் கழித்து நேற்று இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் முக்கியமான மூவர் பாஜக முன்னாள் ஜுனாகட் தொகுதி மக்களவை உறுப்பினர் தினு சோலங்கி, அவர் சகோதரர் மகன் சிவா சோலங்கி மற்றும் முன்னாள் காவலர் பகதூர்சிங் வாதே ஆகியோர் ஆவார்.
இந்த கொலைக்குப் பின்னர் தினு சோலங்கி என்னும் டான் வளர்ந்த விவரம் மற்றும் அவர் வீழ்ச்சியின் கதை அடங்கி உள்ளது.
குஜராத் மாநிலம் சவுராஷ்டிராவில் கிர் வனவிலங்கு சரணாலாயம் மற்றும் சோமநாதர் ஆலயத்துக்கு இடையே சிறு நகரான கொடிநார் அமைந்துள்ளது. இந்த நகரில் புகழ்பெற்ற மூன்றில் இரண்டு கிர் வன விலங்கு சரணாலயம் மற்றும் சோமநாதர் ஆலயம் ஆகும். முன்றாவது அந்த நகரின் டான் தினு போகாபாய சோலங்கி ஆவார் அந்த பகுதியின் பெரும்பானமை இனமான ராஜபுத்திர இனத்தை சேர்ந்தவர் சோலங்கி.
இவர் 1977 வரை சிறு தொழிலதிபராக இருந்தார். அந்த பகுதியில் அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்ட பிறகு சோலங்கியின் நிறுவனம் போக்குவரத்து ஒப்பந்தத்தை எடுத்தது. அன்று முதல் அவருடைய செல்வம் பன்மடங்கு பெருகியது. அவருடைய தொழில் சாம்ராஜ்யம் சுரங்கம், கூட்டுறவு, கப்பல், கட்டுமானம் என பலவிதங்களில் பரவியது. அவர் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலையும் நடத்தினார். இந்த சாம்ராஜ்யம் சோலங்கியின் மகன், சகோதரர், சகோதரர் மகன்களால் கவனிக்கப்பட்டு வந்தது.
குஜராத் மாநிலத்தில் அப்போது காலூன்ற தொடங்கிய பாஜக தனது கட்சியின் வளர்ச்சிக்காக சோலங்கி போன்ற ஒருவரை தேடி வந்தது. பாஜகவில் இணைந்த சோலங்கி கட்சியை வளர்த்ததுடன் தானும் வளர்ந்தார். கடந்த 1998 ஆம் வருட தேர்தலில் தொடங்கிய அவரது வெற்றி 2002 மற்றும் 2007 என தொடர்ந்தது. 2002 இல் நடந்த இஸ்லாமியர் எதிர்ப்பு கலவரத்துக்கு பிறகு பாஜக மாநிலம் எங்கும் மிகவும் வலுப்பெற்றது.
அதை தக்க வைத்துக் கொள்ள மோடிக்கு உள்ளூர் டான்கள் தேவைப்பட்டனர். இதனால் சோலங்கி பாஜகவுக்கு அவசியமானவர் ஆனார். ஒவ்வொரு இனத்துக்கும் ஒருவரை பிரதிநிதியாக வைத்திருந்த பாஜகவுக்கு கொடிநார் ராஜபுத்திர பிரதிநிதியாக சோலங்கி அமைந்தார். அத்துடன் அவர் மோடி மற்றும் அமித்ஷாவின் தளபதியாக மாறினார். அவரை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா புகழ்ந்து பேசி உள்ளார்.
அப்போது அமித் ஜேத்வா என்னும் தகவல் ஆர்வலர் சோலங்கிக்கு எதிராக தேர்தலில் களம் இறங்கினார். அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கட்ச் பகுதியில் சிங்காரா மானை வேட்டையாடியது குறித்து புகார் அளித்ததில் இருந்து புகழ் பெற தொடங்கினார். அவர் சோலங்கியின் வர்த்தக சாம்ராஜ்யம் குறித்து தகவல் சேகரிக்க ஆரம்பித்ததில் இருந்து சோலங்கியின் வீழ்ச்சி தொடங்கியது. கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்தலில் சோலங்கியை எதிர்த்து போட்டியிட்ட ஜேத்வா வெறும் 1751 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அவர் தன்னைப் பற்றிய பல தகவல்களை சட்டத்தின் மூலம் சேகரிப்பதை அறிந்த சோலங்கி அவரை தனது ஆட்களின் மூலம் மிரட்ட தொடங்கினார். ஆயினும் ஜேத்வா தொடர்ந்து சட்டப்படி தனது எதிர்ப்பை நடத்தி வந்தார். அத்துடன் பாஜக அரசின் ஆதரவு சோலங்கிக்கு இருப்பதால் லோக் ஆயுக்தா மூலம் வழக்கு தொடர நினைத்த ஜேத்வா லோக் ஆயுக்தா அமைக்க போராட்டம் நடத்தினார். அவர் போராட்டத்தினால் லோக் ஆயுக்தா அமைந்தது.
சோலங்கி மீது லோக் ஆயுக்தாவில் ஜேத்வா வழக்கு தொடர்ந்தார். இரு மாதங்களில் அவர் குஜராத் உயர்நீதிமன்றம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் சிக்கிய கொலையாளியின் சட்டையில் இருந்த சலவைக் குறியை வைத்து கொலையாளையை கண்டு பிடித்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜேத்வாவின் தந்தை அளித்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி சோலங்கி மற்றும் சிலரை கைது செய்தது. தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.