சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிக கழகத்தில் வேலை செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என செய்யாறு எம்எல்ஏ தூசி கே மோகன்கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மொத்தம் 20 ஆயிரத்து 28 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, போனஸ், பொங்கல் சிறப்பு தொகை, கருணை தொகை உள்ளிட்டவை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தவிர ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 6 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படுவதாகவும், அனைத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக்கப்படுவதாக கூறிய அமைச்சர் காமராஜ், நாளை முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதியம் உயர்த்தி தரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.