சென்னை:

சேலம் ஸ்டீல் உருக்காலை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து, திமுக, அதிமுக எம்.பி.க்கள் இணைந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

இரண்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமரை சந்தித்து சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்கப்பட கூடாது என்று வலியுறுத்தலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் சேலம் உருக்காலை தனியார் மயம்  எதிர்த்து, திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின்,  சேலம் உருக்காலை ஏக்காரணத்தை கொண்டு தனியார் மயம் ஆகக்கூடாது என்றார்.  இது தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்றும், தேவையெனில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் வந்து அழுத்தம் தர அனுமதி கொடுப்பதாகவும்,  சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்க வாய்ப்பு இருந்ருதும், செயில் (SAIL) நிறுவனம் அதை பயன்படுத்தாமல், தனியாருக்கு தாரை வார்க்கவே முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். பயன்படுத்தவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துபேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மத்தியஅரசின் தனியார் மய அறிவிப்புக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுக்கப்பட்டு, அதை  அரசு முறியடியடித்தது என்று கூறியவர்,  இது தொடர்பாக,  அதிமுக, திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமரை சந்தித்து சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்கப்பட கூடாது என்று வலியுறுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னைகளை எழுப்பலாம் என்றும்,  தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.