புதுடெல்லி: மக்கள்தொகை கட்டுப்பாட்டு செயல்முறையை சிறப்பாக மேலாண்மை செய்யும் தென்மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “அடுத்த 8 ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கத்தில் சீனாவை விஞ்சிவிடும் இந்தியா. இந்தியாவிலுள்ள உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்கள், சர்வதேச அளவில் வரையறை செய்யப்பட்ட குழந்தைப் பிறப்பு விகிதமான 2.1 என்பதை அதிகமாக தாண்டிச் சென்று கொண்டுள்ளன.

இதர மாநிலங்கள் அந்த வரையறை அளவை எட்டியுள்ளன. சிறந்த மாநிலம் என்று விளம்பரப்படுத்தப்படும் குஜராத், அந்த வரையறையை மிக தாமதமாகவே எட்டியது.

அதாவது, பிரிக்கப்படாத ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் 20 ஆண்டுகள் கழித்தும், தமிழகத்துடன் ஒப்பிடுகையில் 25 ஆண்டுகள் கழித்தும், கேரளாவுடன் ஒப்பிடுகையில் 30 ஆண்டுகள் கழித்தும்தான் எட்டியது குஜராத்.

எனவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக, அம்மாநிலங்களிலுள்ள நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்துவிடக்கூடாது” என்று கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.