திருவாரூர் அரசு மருத்துவமனையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் டயாலிஸிஸ் மேற்கொள்ள இயலாமல், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை முதல் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இன்று டயாலிஸிஸ் மேற்கொள்ள 70க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறிவுருத்தியிருந்தும், சிலருக்கு மட்டுமே டயாலிஸிஸ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலர் டயாலிஸ் செய்ய விரும்பியும், போதி தண்ணீர் இல்லாத காரணத்தால் டயாலிஸிஸ் செய்ய முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் டயாலிஸிஸ் செய்ய மாற்று மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், டயாலிஸிஸ் மேற்கொள்ளாத காரணத்தால், உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், சுதா, ராமச்சந்திரன், சுந்தரி ஆகிய மூன்று பேர் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக தங்களது மேலிடத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளதாகவும், தீர்வு கிடைக்கும் வரை நோயாளிகளுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்படும் என்றும் மருத்துவமனை டீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து மூவரும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதால், மருத்துவமனையை சுற்றி பதற்றமான சூழல் நிலவி வருகிறது.