ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், ஊழியர்களின் ஒத்துழைப்போடு, தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் இருந்தாலும், அதனை பொதுமக்களை பயன்படுத்த விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்தில் சிக்கி எலும்பு முறியும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இம்மருத்துவமனையில் இல்லை. இதனால்,நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதனால், நோயாளிகளை வெளியூர் கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். நோயாளிகளிடம் மருத்துவமனைக்கு உள்ளேயே சென்று பேரம் பேசுகின்றனர். மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாகன வசதி இருந்தும் அதனை பயன்படுத்த விடாமல் தடுக்கின்றனர். மருத்துவமனை ஊழியர்களும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். எனவே, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள், தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கத்தை குறைத்து, ஏழை எளிய பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.