பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், அரசு பாதுகாப்பாக உள்ளதாகவும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிகோலி ஆகியோர் ராஜினாமா செய்ததையடுத்து, கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், பாரதீய ஜனதா – காங்கிரஸ் கூட்டணி இடையிலான சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வித்தியாசமும் குறைந்தது. இதனையடுத்துதான் அம்மாநில காங்கிரசின் முக்கிய தலைவர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. அரசு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. தற்போதைய நிலையில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய எந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தலை சந்திப்பதை விரும்பவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, இத்தகைய கவிழ்க்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். ஏனெனில், கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு அவர்கள் அவப்பெயரை சம்பாதித்துள்ளார்கள். அரசியல்ரீதியாக தெளிவான சிந்தனை உள்ளவர்கள் இத்தகைய தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடமாட்டார்கள் ” என்று தெரிவித்தார் சிவகுமார்.