சென்னை:

மிழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் அவர் தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக பதவி ஏற்கிறார்.

சேலம் அருகே உள்ள வாழப்பாடியை சேர்ந்த சண்முகம், தமிழகத்தை ஆட்சி செய்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியின்போதும் நிதித்துறை செயலாளராக பணியாற்றி இரு கட்சிகளின் முதல்வர்களிடமும் நன்மதிப்பை பெற்றவர்.

திமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் கருணாநிதியால்  நிதித்துறை செயலராக கடந்த 2010ம் ஆண்டு  நியமிக்கப்பட்டு தற்போதுவரை தனது பணியில் திறம்பட பணியாற்றி, தலைமை செயலாளர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

சண்முகத்தின் சாதனை:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாதாரண நடுத்தவர்க்க குடும்பத்தில் பிறந்தவர் சண்முகம். குடும்பத்தின் முதல் பட்டதாரி. அவரது முதல் அரசுப்பணி 1985ம் ஆண்டு கிடைத்தது. தஞ்சாவூர் உதவி ஆட்சியராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யிலும் துணைகலெக்டராக பணியாற்றி வந்தார்,. தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய வர், பட்டு வளர்ப்பு இயக்குநர், வணிவரித்துறை கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார். பல்வேறு துறைகளில்  பணியாற்றி வந்த சண்முகம்,  சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து கிராம அபிவிருத்தி பணிப்பாளர், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்  தலைவர் மற்றும் பல துறைகளின் நிர்வாக இயக்குனர் பதவிகளும் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவர்.

இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் நிதித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்டார். அப்போது திமுக ஆட்சி நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் நிலவி வந்த கடுமையான நிதி நெருக்கடியை முறியடிக்கும் வகையில் திறமையாக செயலாற்றி முதல்வர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றார்.

அதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு நடைற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா அமர்ந்த நிலையில், பல அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் மாற்றப்படாமல் அதே பணியில் நீடித்து வந்தார்.

சண்முகத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ஜெயலலிதா, நிதித்துறை தொடர்பான சிக்கல்களுக்கு சண்முகம் மூலமாகவே தீர்வு கண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.  நிதி சிக்கல் போன்ற  கடினமான காலங்களில் மாநில நிதியத்தை திறமையான நிர்வகித்து வந்தவர் சண்முகம். தற்போது எடப்பாடி ஆட்சி வரை கடந்த 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராகவே சண்முகம் நீடித்து வந்தார்.

சண்முகம் நிதித்துறை செயலாளராக பதவி ஏற்றது முதல் இதுவரை  ஒன்பது வரவு செலவுத் திட்டங்களையும் (மாநில நிதி பட்ஜெட்),  இரண்டு இடைக்கால (பட்ஜெட்) வரவு செலவுத் திட்டங்களையும் தாக்கல் செய்துள்ளர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போதைய தலைமை செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில், வரும் திங்கட்கிழமை புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவி ஏற்க உள்ளார்.

ஜூலை 1ந்தேதி பதவி ஏற்கும் சண்முகம்,  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பதவியில் இருப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.