சென்னை:
பருவமழை பொய்த்து போன நிலையிலும், ஆளும் வர்க்கத்தினரின் திறமையற்ற நிர்வாகத்தாலும் இன்று தமிழகம் வரலாறு காணாத பேரிழப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மழை நீரை சரியான முறையில் சேமிக்க தவறியதாலும், குளம் குட்டைகளை தூர் வாராமல் தூர்ந்து போக செய்ததாலும், பெரும்பாலான ஏரிகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதாலும் இன்று தண்ணீர் சேமிக்க வழியின்றி நிலத்தடி நீரும் கிடைக்காத பரிதாப நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் சகோதர பாங்குடன் பேசி, காவிரி கிருஷ்ணா போன்ற ஆறுகளில் தண்ணீர் பெற முயற்சி செய்யாத அதிகாரவர்க்கத்தினரின் ஆணவத்தினாலும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது.
குறிப்பாக தமிழக தலைநகர் சென்னையில் தண்ணீருக்காக மக்கள் இரவு முழுவதும் காலி குடங்களுடன் அல்லாடும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக லாரிகளில் வாங்கப்படும் தண்ணீரின் விலையும் வரலாறு காணாத விலையேற்றத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக பல தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், பள்ளிகள் மட்டுமின்றி வெளியூர் வாசிகள் பணி நிமித்தமாக குடியிருந்து வரும் பல மேன்சன்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
அதுபோல பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் போதிய தண்ணீரின்றி சிரமங்களை சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக செய்வதறியாது திகைக்கும் மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கே செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். சென்னையை மிரட்டும் தண்ணீர் பஞ்சத்தால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் காலியாகி வருகின்றன.
ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ள நிலையில், பல ஓட்டல்களும் தங்களது சேவை நேரத்தை குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தை வாட்டி வரும் கடும் வெயில், தற்போது அக்னி வெயிலை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் வெயிலின் தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை அறிவிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், தண்ணீர் பஞ்சம் மக்களின் நா வறண்டுபோக வைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
மாநில அரசு மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க லாரி மூலம் தண்ணீர் வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்து 100 டிரிப் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்து உள்ளது. மேலும், பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் லாரி சர்வீஸ் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. அதுபோல அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கீழே வந்த லாரி தண்ணீரை பிடிக்க முயற்சி செய்யாமல், தனியார் லாரிகள் மூலம் மொத்தமாக தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், தனியார் இடங்களில் இருந்தும் நிலத்தடி தண்ணீர் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல தனியார் நிறுவனங்க ளும் லாரிகளின் தண்ணீர் விற்பனை விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளன.இதுவரை 30 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட ஒரு லாரி தண்ணீர் 2 ஆயிரத்து500 ஆக விற்பனை செய்துவந்த நிலையில், தற்போது தடாலடியாக ரூ.2000 வரை உயர்த்தி ரூ.4500 வரை வசூலித்து வருகின்றனர். இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதி தண்ணீருக்காக செலவிடும் அபாயத்தை எதிர்நோக்கி வருகின்ற னர். தண்ணீரின் விலை உயர்வு அவர்கள் சென்னை மக்களுக்கு தலையில் இடியை தூக்கி போட்டுள்ளது. இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வீட்டை காலி செய்து விட்டு நடையை கட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல மேன்சன்கள் தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் தண்ணீரின்றி கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க…. தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்குமா?