மதுரை:
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளார். இதை மதுரை ஆதீனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
தற்போது மதுரை ஆதீனமாக 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இவர் தற்போது இளைய ஆதினம் ஒருவரை நியமனம் செய்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நேற்று அறிவித்தார்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, அது சர்ச்சையான நிலையில், அவரை அதிரடியாக நீக்கினார். இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், புதிய இளைய ஆதீனத்தை மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் நியமித்துள்ளார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ தொண்டாற்றியுள்ளார்.
அதீன மடத்தின் சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.