டில்லி
ரம்ஜானை முன்னிட்டு தொழுகை நடத்திய 17 பேர் மீது கார் ஏறி காயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு டில்லியில் உள்ள குரேஜி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இன்றைய ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அந்த மசூதிக்கு வந்துள்ளனர். அந்த மசூதியில் இடமில்லாததால் மசூதி வாசலிலும் தொழுகை நடந்துள்ளது.
அந்த பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் இவ்வாறு மசூதிக்கு வெளியிலும் தொழுகை நடப்பது வழக்கமான ஒன்றாகும். இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் ஏராளமானோர் தொழுகை நடத்தி வந்தனர். அந்த சாலை வழியே வேகமாக ஒரு கார் வந்துள்ளது.
மசூதி அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த கார் மசூதி வாசலில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் மீது ஏறியது. இதில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு நிலவிய குழப்பத்தால் அச்சமடைந்த கார் ஓட்டுனர் காருடன் தப்பி உள்ளார். அடிபட்டவர்கள் அருகில் உள்ள மருத்ஹவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை ஒட்டி அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ஏராளாமான இஸ்லாமியர்கள் இன்று தொழுகை நடத்த வருவது தெரிந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யாததற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
காவல்துறையினர் தொழுகை நடத்தியவர்கள் மீது ஏறிய கார் மற்றும் அதன் ஓட்டுனரை கண்டு பிடித்துள்ளதாகவும் விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு குறைவு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.