திருப்பதி
ஒரு முதியவரை அவரது மகனும் மருமகளும் பட்டப்பகலில் நடுத்தெருவில் தாக்கி உள்ளனர்.
திருப்பதியில் வசிக்கும் ஒரு முதியவருக்கும் அவர் மகன் மற்றும் மருமகளுக்கும் சொத்து விஷயமாக தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அந்த முதியவரை சொத்துக்காக சுடு சொற்கள் கூறியும் அவமானகரமாக நடத்தியும் வந்துள்ளனர். ஆயினும் முதியவர் பொறுமையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த முதியவரின் மகன் தந்தையை ஒரு இரும்பு கம்பியால் அடிக்க தொடங்கி உள்ளார். பதறிப்போன முதியவர் வீட்டை விட்டு வெளியேறி நடுத்தெருவுக்கு ஓடி வந்துள்ளார். ஆயினும் மகனும் மருமகளும் அவரை துரத்தி வந்துள்ளனர். நடுத்தெருவில் பட்டபகலில் மகன் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.
மருமகள் மிளகாய் பொடியை எடுத்து வந்து மாமனார் முகத்தில் வீசி உள்ளார். கண்களில் மிளகாய்ப் பொடி பட்டதால் துடித்துப் போன முதியவரை அக்கம் பக்கத்தில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.