சென்னை:
தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் ரயில் நிலையத்தில் திடீர் என மாயமானார். அவர் காணாமல் போய் 100 நாட்கள் ஆன நிலையில், தமிழக காவல்துறை அவரை தேடும் பணியில் தீவிரம் காட்டாமல் இருந்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. முகிலன் என்ன ஆனார், அவர் உயிருடன் இருக்கிறாரா? அவரது நிலை என்ன? என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை.
சமூக ஆர்வலரான இவர் கூடங்குளம் அணு உலை, கரூரில் மணல் கொள்ளை உள்ளிட்ட சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்தார். இதற்காக இவர் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்த முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பான முக்கிய ஆவனங்களை, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முகிலன் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பின்போது, காவல் துறையினர்மீது குற்றம் சாட்டிய நிலையில், அதுதொடர்பான ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.
அதற்கு அடுத்த நாள் முதல் முகிலன் காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக காவல்துறை அவரை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டாமல் இருந்து வருகிறது. முகிலன் காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் முடிவடைகிறது. இன்னும் அவரை தேடி வருவதாக தமிழக காவல்துறை கூறி வருகிறது…
முகிலன் காணாமல் போன விவகாரத்தில் அரசியல் விளையாடுவதாக சந்தேகிக்கப்படுகிறது மேலும், அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தியிருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முகிலனை உடனே கண்டுபிடித்து தர காவல்துறை யினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.