டும்கூர்

கர்நாடக மாநிலத்தில் விளையும் அபூர்வ பலாவான சித்து பலாமரக் கன்றுகளுக்கு நல்ல கிராக்கி உள்ளன.

 

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என கூறலாம். பொதுவாக பலாப்பழம் என்றால் மிகவும் பெரிய அளவில் காணப்படும். ஒவ்வொரு பலாப்பழமும் 10-25 கிலோ வரை எடையுடன் இருக்கும். இந்த பலாப்பழங்கள் தென் இந்தியாவில் மட்டுமே விளைகின்றன. அதிலும் ஒரு அரிய வகை பலாப்பழம் கர்நாடகா மாநிலத்தில் விளைகிறது.

கர்நாடக மாநிலம் டும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சேலூரு என்னும் சிற்றூரில் ஒரு அரியவகை பலாப்பழம் விளைகிறது. எஸ் எஸ் பரமேசா என்பவரின் தோட்டத்தில் விளையும் இந்த பலாப்பழத்துக்கு தன் தந்தையின் நினைவாக சித்து எனப் பெயரிட்டுள்ளார். இந்த பலாப்பழத்தை ஆய்வு செய்த இந்திய தோட்டக்கலை ஆய்வு மையம் இதில் ஏராளமான சத்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

பரமேசாவுக்கு புதிய கண்டுபிடிப்புக்கான விருது அளித்துள்ள இந்திய தோட்டக்கலைக் கழகம் இந்த பலாமரக் கன்றுகளை விற்பனை செய்ய அவருக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது. அவர் அந்த சித்து பலா மரக் கன்றுகளை இந்திய தோட்டக்கலை ஆராய்சி மையத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்த பலாக்கன்றுகளை வாங்க விவசாயிகள் கடும் போட்டி இடுகின்றனர்.

இந்த வருடம் சித்து பலாமரக் கன்றுகளுக்கான தேவை 1 லட்சத்தை எட்டி உள்ளது. ஆனால் தற்போது இந்த பண்ணையில் 10000 பலாக்கன்றுகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே 4500 கன்றுகள் விற்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கன்றுகளை வாங்க ஆஸ்திரேலியா நாடு பெரிதும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆயினும் இதை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

சித்து பலாப்பழம் அளவில் மிகவும் சிறியதாகவும் அதன் சுளைகள் சிவப்புடன் கூடிய செம்பு நிறத்துடன் காணப்படுகிறது. அத்துடன் இதில் வழக்கமான பலாச்சுளைகளை விட அதிக சத்துக்கள் உள்ளன. இந்த பலாப்பழத்தின் எடை 2.5 கிலோ மட்டுமே இருக்கும். வழக்கமான பலாச்சுளையில் உள்ள சுவையை விட அதிக சுவையும் அதிக சத்துக்களும் கொண்டதாக இந்த சித்து பலா அமைந்துள்ளது.