வாரணாசி

பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் கணிதத்தை ரசாயனம் தோற்கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றியை பெற்றுள்ளது.   பாஜக கூட்டணி மொத்தம் 352 தொகுதிகளிலும் அதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளிலும் வென்றுள்ளது.   இந்த தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பு பலரும் பாஜக வெற்றி பெறுவது சந்தேகம் என தெரிவித்தனர்.   அதற்கிணங்க பாஜகவை எதிர்த்து பல கட்சிகள் போட்டியிட்டன.

பிரதமர் மோடி இம்முறை வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.  அவர் தனது தொகுதியில் பிரசாரம் செய்யும் போது, “நான் பிரசாரத்துக்காக அடிக்கடி வர முடியாது.  உங்களில் ஒவ்வொருவரும் மோடி என நினத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.  இது மக்களை மிகவும் கவர்ந்தது.    எனவே மோடியின் நேரடி பிரசாரம் குறைவாக இருந்த போதிலும் மக்களே அவருக்காக பிரசாரம் செய்தனர்.

அத்துடன் உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தனது சாதனைகளை விட மக்களிடம் தனது நெருக்கத்தை தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அதுவும் உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு பெரிய காரணமாக அமைந்தது.   தேர்தலில் வெற்றி பெற்ற மோடி தனது தொகுதிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டார்.

அதன் பிறகு மக்களிடம் உரையாற்றுகையில் அவர், “உத்திரப் பிரதேசம் அரசியலில் ஒரு புது வழியைக் காட்டி உள்ளது.  தொடர்ந்து 2014, 2017, 2019 என மும்முறை வெற்றி பெறுவது சாதாரணமானது இல்லை.   இதற்கு பிறகும் அரசியல் ஆர்வலர்கள் இதை புரிந்துக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் சென்ற நூற்றாண்டில் உள்ளனர் என பொருளாகும்.

தேர்தலுக்கு முன்பு பலரும் பாஜக தோல்வி அடையும் என பல கணக்குகளை போட்டனர்.   ஆனால் மக்களிடம் எனக்கு அன்பு என்னும் ரசாயனம் உள்ளது.   எனவே ஆர்வலர்கள் போட்ட கணக்கை இந்த ரசாயனம் தோற்கடித்தது.   அதாவது ரசாயனத்திடம் கணிதம் தோற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.