சென்னை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரபலமான மனோன்மணியம் கோவிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மரகதலிங்கம், திடீரென அருகே உள்ள  குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரகதலிங்கத்தை திருடியவர்கள், அதை குப்பை தொட்டியில் வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் சிலை கடத்தல்கள் மற்றும் சிலை மாற்றம் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர் பாக  ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டது. இந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிலை கடத்தல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஏராளமான சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐஜி பொன்.மாணிக்கவேல் கொண்ட சிலை கடத்தல் குழுவினர்,  திருவண்ணா மலை அருகே உள்ள வேட்டவெள்ளம் மனோன்மணியம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது  ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோயிலில் இருந்து கடநத  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகலிங்கம் அருகே உள்ள  ஜமீன் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மரகதலிங்கத்தை திருடிய யாரோ அதை, குப்பை தொட்டியில் வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மரகதலிங்கம் விசேஷ பூஜை செய்யப்பட்டு மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது.