டில்லி
நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு லண்டனுக்கு ஓடி விட்டார். அவரை திரும்ப அழைத்து வர இந்திய அரசு தொடுத்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அவர் அதற்கு மேல் முறையீடு செய்து தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரையும் நாடு கடத்தி இந்தியா அழைத்த் வர வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிரவ் மோடிக்கு மூன்றாம் முறையாக ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் இன்னும் சிறையில் உள்ளார்.
இது போல் இந்திய அரசின் சார்பில் சுமார் 132 பேர் மீது நாடு கடத்தக் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாடு கடத்தல் மனு விவரஙக்ள் மற்றும் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களைக் கேட்டு ஒரு பத்திரிகையாளர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவுக்கு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்த மனுக்கள் தற்போது சம்பந்தப்பட்ட பிரிட்டன் அரசு அதிகாரிகளின் ஆய்வில் உள்ளன. தகவல் அறியும் சட்டப் பிரிவு 8 – 1 ஆம் விதியின் கீழ் இந்த மனுக்கள் குறித்து எந்த ஒரு விவரமும் தர இயலாது.” என பதில் அளித்து விவரங்களை அளிக்க மறுத்துள்ளது.